நக்கீரனில் வந்த பேட்டி.
தவ்ஹீத் ஜமாத்தின் நிறுவனர் ஜெய்னுலாபுதீன் ராமநாதபுரம் வந்திருந்தார். தங்கள் அமைப்பின் அரசியல் நிலைப்பாடு சம்பந்தமாக நம்மிடம் பேசினார்.
“தி.மு.க.விற்கு எங்களுடைய தார்மீக ஆதரவை வழங்குகின்றோம். தி.மு.க. போட்டியிடும் 21 தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் செய்வோம். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பிரச்சாரம் செய்யமாட்டோம். அவர்கள் மத்தியில் இஸ்லாமியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொண்டு வர முயற்சிக்கவில்லை. அதேவேளையில் புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்போம். காரணம், புதுகை மாநிலத்தில் முஸ்லிம் இடஒதுக்கீட்டுக்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றது” என்றவரிடம்....
“த.மு.மு.கவின் அரசியல் கட்சியான ம.ம.க.வுக்கு ஆதரவு அளிப்பீர்களா? என்றோம்.
மற்ற சகோதர இயக்கங்களைக் கூட ஓரளவு ஏற்றுக் கொள்வோம். ஆனால் ம.ம.கவை விட மாட்டோம். காரணம், ஒவ்வொரு மாவட்டத்திலும் அவர்களுக்கு நல்ல பெயர் இல்லை. வக்ஃபு வாரிய பதவியை வைத்துக் கொண்டு ஒவ்வொரு ஜமாத்திலும் த.மு.மு.க.வை சேர்ந்த 2 பேரை உறுப்பினராகப் போடுவதற்கு வற்புறுத்தினார்கள். அது மட்டுமில்லாமல் இஸ்லாம் மதத்திற்குள் புகுந்தவிட்ட மூடநம்பிக்கைகள் பற்றி நாங்கள் சீர்திருத்தச் பிரச்சாரம் செய்கிறோம். எங்களுக்கெதிராக வன்முறையில் இறங்குவதே த.மு.மு.க.வினர் தான்.
இவர்களை தி.மு.க. கூட்டணியில் சேர்ந்திருந்தாலும், அவர்களை நாங்கள் எதிர்த்திருப்போம். இவர்கள் தி.மு.கவிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே, அ.தி.மு.கவிலும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றார்கள். ஆனால் இரண்டு கட்சிகளுமே இவர்களை நம்பவில்லை என்பதுதான் உண்மை”.
“கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவை ஆதரித்தீர்கள். இப்போது தி.மு.க.வை ஆதரிக்கிறீர்களே?”
சொந்த வெறுப்பு, விருப்புகளுக்காக யாரையும் ஆதரிப்பதில்லை. குறைந்தபட்ச சமுதாய நலன் என்ற கோணத்தில்தான் முடிவு எடுக்கின்றோம். கலைஞர் முடிந்தவரையில் இஸ்லாமிய மக்களுக்கு நன்மை செய்திருந்தார்கள். இன்னொரு விஷயம் ஜெ.க்கும் பா.ஜ.க.வுக்கும் இன்னும் தொடர்பு உள்ளது. அதனால்தான் அத்வானி உறுதியாக “தேர்தலுக்குப் பின் ஜெ. எங்களை ஆதரிப்பார்” என்று சொல்கிறார். இதை இப்போது ஜெயலலிதா மறுக்கிறாரே தவிர பா.ஜ.க.வுக்கு ஆதரவு கொடுக்கமாட்டேனென்று உறுதியாகக் கூறவில்லை. அதனால் தான் ஜெ. கட்சி வெற்றி பெறக் கூடாது என்கிறோம்”.
“தவ்ஹீத் ஜமாத் எப்போது அரசியல் கட்சியாகப் போகிறது?”
நாங்கள் நடத்தும் கூட்டங்கள், மாநாடுகளைப் பார்த்து அதில் கலந்து கொள்கிற மக்களைப் பார்த்து எல்லோரும் தொடர்ந்து கேட்கும் கேள்வி இதுதான். எங்களால் எல்லாம் விஷயத்திலும் சமரசம் செய்து கொள்ள முடியாது. அரசியல் கட்சியானால் அனைத்துவிதமான விமர்சனங்களும் வரும். ம.ம.கவைப் பற்றி கேட்கின்ற கேள்விகள் எங்கள் மீதும் விழும். அதனால் சமூக சீர்திருத்த இயக்கமாகவே இருந்து விடுவோம்” என்கிறார் ஜெய்னுலாபுதீன்.
நன்றி : நக்கீரன்
http://tntj.net/Statement/PJ_Statement_inNakkeeran_25-4-2009.asp
Wednesday, 29 April 2009
முஸ்லிம்கள் திமுகவை ஏன் ஆதரிக்க வேண்டும் - TNTJ
Posted by முஹம்மத் at 07:46 0 comments
Labels: தேர்தல் 2009
Tuesday, 28 April 2009
TNTJ - 2009 பாராளுமன்ற தேர்தல் நிலைப்பாடு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநிலப் பொதுக் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் முஸ்லிம்களுக்குத் தனி இடஒதுக்கீடு அளிக்கும் ஆணையம் அமைத்ததற்காக அதிமுக கூட்டணியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரித்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் ஜெயலலிதா அமைத்த ஆணையம் பயனற்றுப் போனது. திமுக தலைமையில் ஆட்சி அமைந்த பின்னர் தனி இடஒதுக்கீடு கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு வீரியமிக்க போராட்டங்களை நடத்தியது. இதன் விளைவாக திமுக அரசு முஸ்லிம்களுக்கு மூனறை சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றியது. இது போதுமானதாக இல்லாவிட்டாலும் இந்த அளவிற்காவது கிடைத்ததே என்பதற்காக எதிர்வரும் தேர்தலில் திமுகவை ஆதரிப்பது என்று முடிவு செய்து முதல்வரிடம் எழுத்து மூலமான ஆதரவை டிஎன்டிஜே தெரிவித்தது.
ஆனாலும் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஏராளமான வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டனர். இதை எதிர்த்தும் டிஎன்டிஜே பல்வேறு போராட்டங்களை நடத்தியது. ஆரம்பத்தில் இதை அலட்சியம் செய்த முதல்வர் முஸ்லிம் மக்களின் கடும் அதிர்ப்தியைக் கண்ட பின் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதை ஒப்புக் கொண்டு சரி செய்வதாக உறுதியளித்தார். இதன் பின்னர் வழங்கப்பட்ட வேலை வாய்ப்புகளிலும் உயர் கல்வியிலும் மூனறை சதவீதம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் கடந்த ஆறு மாதங்களில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி சரி செய்யப்பட்டதாகத் தெரியவில்லை
இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென்ற கோரிக்கையையும் முதல்வர் கண்டு கொள்ளவில்லை. எனவே இடஒதுக்கீடு சட்டம் அமுலுக்கு வந்த பின் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி சரி செய்யப்படாத காரணத்தால் தீவிரமான ஆதரவை திமுகவிற்கு அளிக்க இயலாது. அதே சமயம் இடஒதுக்கீட்டை தற்சமயம் நடைமுறைப்படுத்தியதால் திமுகவிற்கு தார்மீக ஆதரவளிப்பது என்று தீர்மானிக்கிறோம்.
1. கடந்த காலத்தில் செய்யப்பட்ட அநீதியைச் சரி செய்வதாக காலக்கெடுவுடன் எழுத்து மூலமான உறுதிமொழி அளித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் சில்லறைப் பிரச்சனைகளுக்காக முஸலிம்களின் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்கினால் திமுகவை தீவிரமாக ஆதரிப்பது என்று பொதுக்குழு தீர்மானிக்கிறது.
2. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கடந்த தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதாக தெரிவித்தது. ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் முழுமையாக இருந்தும், இடஒதுக்கீட்டை ஆதரிக்கும் கட்சிகள் துணைக்கு நின்றும் முஸ்லிம்களுக்கு இடுஒதுக்கீடு அளிக்க மறுத்து முஸ்லிம்களை ஏமாற்றியது. அமெரிக்கா உடன் அடிமை சாசனம் செய்ய தீவிர முயற்சி செய்த மத்திய அரசு முஸ்லிம்களை வஞ்சித்து விட்டது. இப்போதய தேர்தல் அறிக்கையில் கூட முஸ்லிம்களின் இடஒதுக்கீடு குறித்து எதையும் குறிப்பிடவில்லை. அமெரிக்க அனுசக்தி ஒப்பந்தம், இஸ்ரேலுடன் இராணுவ உறவு, கலவரத் தடுப்பு காவல்படை அமைப்பதாக அளித்த வாக்கை மீறியது. பாபர் மசூதிக்கு நியாயம் வழங்க மறுத்தது என்று அடுக்கடுக்கான அநியாயங்களைச் செய்து வந்ததுடன் கடைசியாக இடஒதுக்கீடு விஷயத்திலும் அநீதி செய்துள்ளது. எனவே வரும் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 15 தொகுதிகளிலும் காங்கிரசிற்கு ஆதரவு அளிப்பதில்லை என்று பொதுக்குழு தீர்மானிக்கிறது.
3. விடுதலைச் சிறுத்தை அமைப்பினர் முஸ்லிம் செல்வந்தர்களையும் வணிகர்களையும் நில உரிமையாளர்களையும் மிரட்டி அராஜகம் செய்து வருவதாலும் அவர்களை திருமாவளவன் அடக்கி வைக்காத காரணத்தாலும் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் விடுதலை சிறுத்தைகள் மீது கடும் கோபத்தில் உள்ளனர். எனவே விடுதலைச் சிறுத்தைகளை ஆதரிப்பதில்லை என்றும் இப்பொதுக்குழுவில் தீர்மானிக்கப்படுகிறது.
4. அதிமுகவைப் பொறுத்தவைர முஸ்லிம்களின் எதிரியாக பார்க்கப்பட்டாலும் இடஒதுக்கீடு ஆணையம் அமைத்ததால் அதிமுகவிற்கு முஸ்லிம்கள் வாக்களித்தனர். திமுகவின் கோட்டையான சென்னையில் அதிக இடங்களை அதிமுக பெற்றதற்கும் பலமான எதிர்க்கட்சியாக அமைந்ததற்கும் முஸ்லிம்களே காரணம். இந்த விசுவாசம் இல்லாமல் முஸ்லிம்களின் முதுகில் குத்தும் வகையில் பயங்கரவாதி மோடியை அழைத்து விருந்தளித்து முஸ்லிம்களின் ஆதரவு தேவையில்லை என்று சொல்லாமல் சொன்ன ஜெயலலிதாவையும் அவரது கூட்டணியையும் ஆதரிப்பதில்லை.
5. பமாக தொடர்ந்து முஸ்லிம் விரோதியாகச் செயல்படுவதாலும் இலங்கைப் பிரச்சனையை மையமாக வைத்து முஸ்லிம்களுக்கு தீவிரவாதிப் பட்டம் சுமத்தியதாலும் கடந்த தேர்தலிலும் இந்த தேர்தலிலும் முஸ்லிம்களுக்கு ஒரு இடம் கூட தராத காரணத்தினாலும் முஸ்லிம்களின் இடஒதுக்கீடு விஷயத்தில் புதுவையில் உள் வேளை செய்த காரணத்தினாலும் பமகாவை ஆதரிப்பதில்லை என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.
6. விஜயகாந்தைப் பொறுத்த வரை அவர் ஆளும் கட்சியாகவோ எதிர்க் கட்சியாகவோ இருக்கவில்லை. அவரை எடைபோட அவர் நடித்த சினிமாக்கள் தான் உள்ளன. அவரது சினிமாக்களில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கின்ற போக்கு தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுவதால் அவரையும் அவரது கட்சியையும் ஆதரிப்பதில்லை என்று பொதுக்குழு தீர்மானிக்கிறது.
7. புதுவையில் மட்டும் புதுவை மாநில அரசு இடஒதுக்கீட்டிற்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதாலும் ஆணையம் அமைத்ததாலும் விரைவில் இடஒதுக்கீட்டை அளிப்பதாக முதல்வர் நேரடியாக புதுவை நிர்வாகிகளிடம் வந்து வாக்குறுதி அளித்ததாலும் புதுவையில் மட்டும் காங்கிரசிற்கு ஆதரவு அளிப்பதாக இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.
8. மனித நேய மக்கள் கட்சி எங்கு நின்று போட்டியிட்டாலும் அவர்களுக்கு எதிராக அவர்களின் சமுதாய துரோகங்களை அடையாளம் காட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் களம் இறங்கி அவர்களை தோல்வியை தழுவச் செய்யும் என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.
திமுக போட்டியிடாத தொகுதிகளில் காங்கிரஸ்-அதிமுக அல்லது காங்கிரஸ்-பாமக அல்லது காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் அல்லது காங்கிரஸ்-மதிமுக, அல்லது விடுதலைசிறுத்தைகள்-பாமக போட்டியிடும் போது இரண்டு வேட்பாளர்களும் சம நிலையில் இருந்தால் யாரையும் ஆதரிக்காமல் இருக்க வேண்டும். இருவரில் ஒருவரை விட மற்றவர் முஸ்லிம்களுக்குப் பயன்படுவார் என்று மாவட்ட நிர்வாகம் தக்ககாரணங்களுடன் தெரிவித்தால் மாநில நிர்வாகம் பரிசீலித்து அதனை ஏற்றுக் கொள்ளும்.
Posted by முஹம்மத் at 10:57 0 comments
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் - கொள்கைகள்- பைலா
அமைப்பின் கொள்கைள்:
1. இறைவேதம் திருக்குர்ஆனையும் இறுதித்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் வழிமுறையான சுன்னத்தையும் தனது வாழ்வில் வழி காட்டியாகவும் ஜீவ நாடியாகவும் ஏற்று செயல் படுவதுதன் மூலமே ஒருவன் ஈடேற்றம் பெற முடியும்.
2. மனிதக்குலம் உயர்வதற்கு திருக்குர்ஆனும் நபி(ஸல்) அவர்கள் சுன்னத்தும் மாத்திரமே போதும் அவற்றுடன் வேறெதுவும் தேவையில்லை.
3. எந்தக் கருத்தாவது திருக்குர்ஆனின் ஏதேனுமொரு வசனத்திற்கோ, நம்பத்தகுந்த ஏதேனுமொரு நபி மொழிக்கோ முரணாக இருந்தால் அது எவரது கூற்றாக இருந்தாலும் புறக்கணிக்கப்படும்.
4. உள்ளாட்சி சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகிய எந்த தேர்தலிலும் போட்டியிடுவதில்லை. சூழ்நிலைக்கு ஏற்றவாறு தேர்தலின் எந்த கட்சிக்கு வாக்களிப்பது என்பதைப் பற்றி மட்டும் கருத்து கூறப்படும்
அமைப்பின் நோக்கங்கள்:
1. இவ்வமைப்பின் கொள்கைகளை தானும் ஏற்று பின்பற்றுவதுடன் அவ்வாறு பின்பற்றத் தூண்டுவது.
2. அமைப்பின் கொள்கைகளை விளங்கி மக்களிடம் பிரச்சாரம் செய்தல் அதன்பால் அழைத்தல்.
3. மக்கள் அனைவரும் கல்வி, பொருளாதாரம், மருத்துவம், சுகாதாரம், தொழில், தொழில் நுட்பம், கலாச்சாரம், பண்பாடு, சமூக நலம் உள்ளிட்ட எல்லாதுறைகளிலும் மேம்பாடு அடையப்பாடுபடுதல்.
அமைப்பின் செயல் திட்டங்கள்:
1. கல்வி நிறுவனங்கள் ஏற்ப்படுத்துதல்.
2. பத்திரிக்கைகள், மலர்கள், நுற்கள், பிரசுரங்கள், ஒளி-ஒலி நாடாக்கள், குறுந்தட்டுகள் வெளியிடுதல்.
3. தொலைக்காட்சி, வானொலியில் நிகழ்ச்சிகளை வழங்குதல்.
4. தெரு முனை பிரச்சாரங்கள், சந்திப்புகள், கலந்துரையாடல், கூட்டங்கள், மாநாடுகள், கருத்தரங்குகள் நடத்துதல்.
5. நோக்கங்கள் நிறைவேற நவீன விஞ்ஞானத்தையும், விஞ்ஞான முறைகளையும், சாதனங்களையும் தகவல் தொடர்பு சாதனங்களையும், கம்ப்யூட்டர், இன்டர்நெட் உள்ளிட்ட அனைத்தையும் பயன்படுத்துதல்.
6. அதற்காக சொத்துக்கள் வாங்கி பராமரித்தல்.
7. நிதிக்காக உண்டியல், சந்தா, நன்கொடை மூலம் பொருள் திரட்டுதல்.
8. நோக்கங்கள் நிறைவேறவும், செயல்திட்டங்களை செயல்படுத்தவும் சிறப்புக் குழுக்கள், அமைப்புகள் ஏற்படுத்தல்.
9. கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மக்கள் தொகை பிரதிநிதித்துவ அடிப்படையில் முஸ்லிம்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் தனி இட ஒதுக்கீடு பெறுவதற்காகவும், உள்ளாட்சி அமைப்புகள், சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகியவற்றில் முஸ்லிம்களின் மக்கள் தொகை பிரதிநிதித்துவ அடிப்படையில் தனித் தொகுதி முறையை பெற்றுத் தரவும் பாடுபடுவது.
10. சமூகக் கொடுமைகளுக்கு எதிராக - வரதட்சணை, வட்டி, சினிமா, ஆபாசம், அழகிப்போட்டி, போதைப்பொருட்கள், மது, சூதாட்டம் போன்ற சமூகத் தீமைகளை ஒழிப்பதற்காக விழிப்புணர்வு பிரச்சாரங்கள், சுவரொட்டிகள் வெளியிடுதல், பிரச்சாரக் கூட்டங்கள், கருத்தரங்குகள், மாநாடுகள் நடத்துதல் மற்றும் தேவைக்கேற்ப ஜனநாயக ரீதியான ,சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்வது.
11. அடக்கு முறைகள், வரம்பு மீறல்கள், மனித உரிமை மீறல்கள், சட்ட மீறல்கள் இவற்றுக்கெதிராகவும் போராடுவது.
12. பாதிக்கப்பட்ட - அநீதி இழைக்கப்பட்ட எல்லா தரப்பு மக்களுக்கும் தேவையான அனைத்து வகையான உதவிகளையும் மேற்கொள்வது.
13. மதவெறி,வன்முறை கலாச்சாரங்களை ஒழிப்பதற்குப் பாடுபடுவது.
14. இளைஞர்களை வன்முறையின் பக்கம் செல்வதை விட்டும் தடுப்பதற்கு அறவழிப்போராட்டத்திற்கான வழிமுறைகளையும், அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துச் சொல்லி அவர்களை சிறந்த நெறியாளர்களாக உருவாக்கப்பாடுபடுவது.
15. மத தீவிரவாதிகளிடமிருந்து இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் அச்சுறுத்தலோ,பாதிப்புகளோ ஏற்;பட்டால்; அவற்றை ஜனநாயக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் வலிமையாக எதிர்ப்பது.
16. அனைத்து மத, இன, மொழி மக்களும் சகோதரத்துவ உணர்வுடன் வாழ நல்லிணக்கத்தை ஏற்ப்படுத்திட தேவையான அனைத்து முயற்ச்சிகளையும் மேற்க்கொள்வது.
Posted by முஹம்மத் at 10:52 0 comments